என் வழி தனி வழி...11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்: பீகாரில் விசாரணைக்கு உத்தரவு

பாட்னா: பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்திற்கு உட்பட்ட சவுசா பகுதியை சேர்ந்தவர் பிரம்மதேவ் மண்டல் (84). தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அனைவரையும்  போல் இவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். ஆனால், ஒரு முறை 2 முறை அல்ல... 11 முறை. இது அவரே கூறிய அதிர்ச்சி தகவல்.

ஒவ்வொரு முறையும் ஒரே செல்போன் எண், ஆதார் எண்ணை கொடுத்தே அவர் தடுப்பூசி போட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி அமிர்தம் போன்றது. வாழ்க்கையின் அமுதமாகும். அதை நான் அபரிமிதமாக பெற்றுள்ளேன். இடுப்பு வலிக்கு கூட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனக்கு இப்போது அதிகளவு ஆக்சிஜன் உள்ளது. இருமல், சளி போன்றவற்றால் பாதிக்கபடுவதில்லை. இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒன்றிய அரசு மிகவும் பயனுள்ள தடுப்பூசியை கொண்டு வந்துள்ளது. ஏன் மற்றவர்கள் அதிக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவில்லை? காங்கிரஸ் உள்ளிட்டவை பிரதமர் மோடி அரசை தவறாக குறி வைத்துள்ளன. இந்த தடுப்பூசியால் நான் அதிக பயன் அடைந்துள்ளேன்,” என்றார்.

இவர் 12வது முறையாகவும் தடுப்பூசி போடுவதற்காக முகாமுக்கு சென்றுள்ளார். ஆனால், முகாம் ரத்து செய்யப்பட்டதால் அவரால் 12வது தடுப்பூசியை போட முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மண்டலின் விவகாரம் தற்போது விஸ்வரூபமாகி உள்ளது. மாவட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இவர் 11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டது உண்மை என்றால், அலட்சியம் காட்டிய அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: