சென்னை- மதுரை இடையே இயக்கப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அழுகிய நிலையில் தொங்கிய மனிதனின் கால்: போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

சென்னை: சென்னை- மதுரை இடையே இயக்கப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அழுகிய நிலையில் தொங்கிய மனிதனின் கால் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை-மதுரை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதைப்போன்று மறுமார்க்கமாக மதுரை- சென்னை எழும்பூர் இடையே வாரத்துக்கு 6 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை மட்டும் பராமரிப்பு பணிக்காக சென்னை சேத்துப்பட்டு பணியில் நிறுத்தப்படுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து சென்னை வந்தடைந்தது.

இதையடுத்து நேற்று வழக்கம் போல் சேத்துப்பட்டு பணிமனைக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்து ரயில்வே ஊழியர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் பெட்டியின் அடியில் பராமரிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது பணிமனை ஊழியர்கள் இ-1 பெட்டியின் அடியில் பராமரிப்பு பணி மேற்கொண்ட போது அங்கு அழுகிய நிலையில் மனித கால் ஒன்று தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து சென்னை எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஷாலினி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அழுகிய நிலையில் இருந்த காலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயிலின் அடியில் தொங்கிய நிலையில் இருந்த கால் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போலீசார் கூறுகையில்: தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அழுகிய நிலையில் இருந்தது, ஆண் கால் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ரயிலில் அடிபட்டு எவரும் உயிரிழந்துள்ளனரா? என மதுரையில் இருந்து சென்னை வரை உள்ள அனைத்து ரயில்வே காவல் நிலையத்திலும் தகவல் கேட்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த காவல் நிலையத்தில் இருந்தும் விபத்து ஏற்பட்டதாக கூறப்படவில்லை. மேலும் கால் அழுகிய நிலையில் இருப்பதால் விபத்து ஏற்பட்டு ஒரு வாரத்துக்கும் மேல் ஆகியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது. மேலும் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தரப்பில் கூறினர்.

Related Stories: