ஸ்மார்ட் சிட்டி குறித்து ஆய்வு செய்ய விசாரணை குழு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:  சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஒமிக்ரானை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. நமது மாநிலத்திலும் முதலமைச்சர் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். எனவே, அந்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்தால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். ஒமிக்ரான் தொற்றால் ஒரே நேரத்தில் அதிகப்படியான நோயாளிகள் மருத்துவமனையில் சேருவார்கள் என்பதால் அரசு அதிகப்படியான படுக்கை வசதிகளை செய்துதர வேண்டும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஐசிஎம்ஆர் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில், ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 நாள் வீட்டிலேயே தனிமை படுத்தினால் போதும் மருத்துவமனை நோக்கி வரத்தேவையில்லை என்று கூறியுள்ளார்கள். தமிழ்நாட்டை பொருத்தவரை ஒருவர் மூலமாக 9 பேர் வரையில் தொற்று பரவல் என்பது இருக்கும். வரும் காலங்களில் தொற்று என்பது உயரும். ஆனாலும், பதற்றப்பட வேண்டியது இல்லை. 1.75 லட்சம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

எடப்பாடி பழனிசாமி: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டது அதிமுக அரசு. உள்ளாட்சி துறையில் 28 பேர், காவல்துறை, வருவாய் துறையில் இந்த நிதி கொடுத்துள்ளோம்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கொரோனா தொற்றால் இறந்த 375 முன்களப்பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க ரூ.93 கோடியே 15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கொண்டுவந்தது தமிழக முதல்வர். நீங்கள் கொடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

எடப்பாடி பழனிசாமி: இந்த அரசாணை வெளியிட்டதே அதிமுக அரசு தான். நீட் தேர்வு யாரால் கொண்டுவரப்பட்டது என்பதை நாடே அறியும். (செல்வப்பெருந்தகை பேச முயன்றார். அப்போது அதிமுகவினர் கூச்சலிட்டனர்)

எடப்பாடி பழனிசாமி:  நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனால், அதிமுக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்து நிறைவேற்றியது. இதனால், 435 பேருக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது.

அவை முன்னவர் துரைமுருகன்: நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பதை நீங்களும் உணர்வீர்கள். நாங்களும் உணர்வோம். வைத்தியலிங்கம் பேசும் போது இதற்கு துணை நிற்போம் என்று கூறிவிட்டார். இதனால், இதுமுடிந்துவிட்டது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: நுழைவுத்தேர்வை நுழையவிடாமல் செய்ததே கலைஞரின் ஆட்சியில் தான். அதில் ஒரு பகுதி தான் நீட் தேர்வு. அதையும் நுழையவிடாமல் செய்தது கலைஞர் தான்.

எடப்பாடி பழனிசாமி:  அதிமுக ஆட்சியில் சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்று 5 மாதத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் சென்னையில் தேங்காமல் இருந்திருக்கும்.

அமைச்சர் கே.என்.நேரு: எதிர்கட்சி தலைவர் ஒவ்வொரு வருடமும் மழைகாலம் தொடங்குவதற்கு முன்பாக தூர்வாரிவிடுவோம் என்று கூறியுள்ளார். அப்படி தூர்வாரியிருந்தால் கடந்த காலங்களில் சென்னையில் எப்படி தண்ணீர் தேங்கியது. 10 ஆண்டுகாலம் நீங்கள் செய்யாத காரணத்தினால் தான் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உங்களுடைய ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை அறிவித்து அதை தி.நகர் பகுதியில் உங்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்றியுள்ளீர்கள். சென்னையில் மழை பெய்யும் போது தி.நகர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காது. காரணம் திமுக ஆட்சியின் போது தி.நகர் பகுதியில் மாம்பலம் கால்வாய் பகுதியை சுத்தப்படுத்திக்கொடுத்து, ஒழுங்குபடுத்தி சரிசெய்து வைத்திருந்தோம். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்ட போதுகூட தி.நகர் பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. ஆனால், இப்போது தி.நகர் பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அங்கிருந்த மழைநீர் வடிகால்களை அடைத்து நடைபாதைகளை உயர்த்தி எந்தவிதமான கவனமும் இன்றி செய்த காரணத்தினால் தான் தி.நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதை அப்புறப்படுத்த ஒருவார காலம் ஆகியது. நீங்கள் செய்த கோளாரால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை குழுவை போட உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதற்கான விதிமுறைகளை மீறி நீங்கள் உருவாக்கிய காரணத்தினால் தான் தி.நகர் பகுதியில் இந்த நிலை ஏற்பட்டது. இதை கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

Related Stories: