×

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் (அதிமுக) பேசியதாவது: நீட் தேர்வு ரத்துக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும். இந்த அரசுடன் சேர்ந்து போராட தயார். ஆனால் இது வெற்றி பெறுமா என்று சிந்தித்து பாருங்கள். நீட் தேர்வு தள்ளியே போனால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகி விடும். எனவே, உரிய பயிற்சி அளித்து நீட் தேர்வை சந்திக்கக்கூடிய சக்தியை கொடுங்கள். ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல் விலை வருமா?

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: ஜிஎஸ்டி கவுன்சிலில் பல முறைகேடுகள், குறைகள் ஏற்கனவே இருக்கிறது. அவசரமாக கூட்டப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மறுபடியும் இதை நான் பதிவு செய்து அதை அவர்கள் ஏற்று கொண்டு பல திருத்தங்களை உங்கள் அறிவுரை படி நாங்கள் முன் எடுக்கிறோம். கலந்தாலோசித்து எடுக்கிறோம் என்றார்கள். 4 ஆண்டுகளாக இருக்கிற இந்த குறைகளை முதன் முறையாக ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு அதை திருத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்த குறைகள் இருக்கிற சூழ்நிலையிலும், செஸ் சர்சார்ஜில் ஒரு லிட்டருக்கு ரூ.30 ஒன்றிய அரசு எடுத்து கொண்டிருக்கிற நிலையிலும், இதை ஜிஎஸ்டியில் கொண்டு வருவது சரியாகாது. என்றைக்கு செஸ் சர்சார்ஜை ஆப் செய்கிறார்களோ உடனடியாக ஜிஎஸ்டியில் சேர நாங்களும் தயார் என்று கூறியிருக்கிறோம். அதை திசை திருப்பி சேர மாட்டோம், இல்லை என்று கூறுவது தவறானது.

வைத்தியலிங்கம்: ஆன்லைன் சூதாட்டத்தால், வங்கி அதிகாரி குடும்பமே தற்கொலை செய்துள்ளது. இப்படி பல உயிர்கள் பலியாகிறது. அதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சியைச் சார்ந்த உறுப்பினர் வைத்தியலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தைப் பற்றி இங்கே எடுத்துச் சொன்னார்கள். இதுகுறித்து தொடர்ந்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரையில், சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 3.8.2001 அன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே, 2021ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது. ஆனாலும், அந்தத் தீர்ப்பின்மீது சட்ட ஆலோசனை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பினைத் தடை செய்யக் கோரி, இந்த அரசு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்திருக்கிறது. வழக்கைப் பொறுத்தவரைக்கும், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்திலே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Chief Minister ,MK Stalin , An end to online gambling: Chief Minister MK Stalin's announcement in the legislature
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...