×

உடன்குடியில் ரூ.6.5 கோடி அம்பர்கிரீஸ் பறிமுதல்: வாலிபர் கைது

உடன்குடி: உடன்குடி பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.6.5 கோடி மதிப்பிலான அம்பர் கிரீசை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்.இன்ஸ்பெக்டர் ஜயப்பன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த செய்துங்கநல்லூர் பரதர் தெருவைச் சேர்ந்த திருமலைநம்பி மகன் முருகேஷ் (27) என்பவரிடம் போலீசார் ஆவணங்களை சரிபார்த்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதனையடுத்து அவரது பைக்கை சோதனையிட்ட போது, திமிங்கலத்தின் உமிழ்நீரான அம்பர்கிரீசை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 6.5 கிலோ எடையுள்ள அம்பர்கிரீஸை பறிமுதல் செய்தனர். 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள், உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர் கிரீஸ். கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மதிப்பில் ஒரு கிலோ அம்பர் கிரீஸ் ரூ.1 கோடிக்கு விற்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட அம்பர்கிரீஸை போலீசார், திருச்செந்தூர் வனச்சரகர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். உடன்குடி பகுதியில் திமிலங்கலத்தின் உமிழ்நீரை வாங்க முயன்ற தொழிலதிபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல் களமாகும் தென் பகுதி கடற்கரை
தமிழகத்தில் அபூர்வ வகையான பொருட்களை வாங்கி அதனை கூடுதல் விலைக்கு வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கென கும்பல் உள்ளது. இதில் பெரும்பாலும் கடத்தல் மூலமே பொருட்களை கொண்டு செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை வெளிமாவட்டங்களில் தான் கடத்தலின் போது போதை பொருட்கள், இதர பொருட்கள் சிக்கியதாக தகவல் வந்தது. ஆனால் தற்போது தென்மாவட்ட கடற்கரை பகுதியான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் பகுதியில் கடத்தல்காரர்கள் முகாமிட்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள், கடல் அட்டை, அபூர்வ வகையான பொருட்கள், மஞ்சள், பீடி இலை என கடல் வழியே கடத்த முயன்றதாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே போலீசார், கடற்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கடத்தல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Tags : Udankudi ,Valipar , Udankudi, Ambergris, confiscated, Valipar arrested
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா