திருவொற்றியூரில் இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் ஒரு பகுதியை இடிக்கும் பணி தீவிரம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இடிந்துவிழுந்த குடிசை மாற்று வாரியகுடியிருப்பின் மற்றொரு பகுதியை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, டி.பிளாக்கின் ஒரு பகுதியில் உள்ள 28 வீடுகள் கடந்த 3ம்தேதி திடீரென இடிந்துவிழுந்தது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக  உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து இடிந்துவிழுந்த வீடுகளை பார்வையிட்டனர்.

பின்னர், கட்டிட கழிவுகளை  பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். கட்டிட இடிபாடுகளில் புதைந்த நகை, சிலிண்டர் மற்றும் பீரோ உள்ளிட்ட பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய்  இழப்பீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கே.பி.சங்கர் எம்எல்ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ₹10 ஆயிரம் மற்றும் அரிசி, பெட்ஷீட், பாய்களை வழங்கினார். இந்த நிலையில், இடிந்து விழுந்த டி.பிளாக் கட்டிடத்தின் மற்றொரு பகுதி இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர், அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழுவினர்  கட்டிடத்தின் உறுதி மற்றும் 30 இடங்களில் ஆழ்துளையிட்டு மண் பரிசோதனை  செய்தனர்.

பின்னர் குடிசைமாற்று வாரியத்தின் ஒரு பகுதியை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த பகுதிக்கு பொதுமக்கள் வராதவகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை குடிசை மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வமணி, செயற்பொறியாளர் செந்தாமரைக்கண்ணன், முன்னாள் திமுக கவுன்சிலர் தி.மு.தனியரசு ஆகியோர் இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்களது முன்னிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதி பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.

Related Stories: