×

பீகாரில் இதுவரை 11 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறிய முதியவரால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி

பாட்னா: பீகாரை சேர்ந்த 84 வயது முதியவர் இதுவரை 11 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறிய கருத்தால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 11 டோஸ் தடுப்பூசி ஒருவருக்கு எவ்வாறு செலுத்த முடியும் என்பது குறித்து விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய அரசு இரு டோஸ் தடுப்பூசி மட்டுமே பரிந்துரைத்துள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் வரும் 10-ம் தேதி முதல் முதியோர், இணைநோய்கள் இருப்போர், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஆனால், பீகாரின் மதேபுரா மாவட்டம், சாவுசா நகரைச் சேர்ந்த 84 வயதான பிரம்மதேவ் மண்டல், 11 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளதைக் கேட்டு மருத்துவர்கள், அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தடுப்பூசி செலுத்தும் செயல்முறை என்பது ஆதார் எண் அடிப்படையில் பதிவு செய்து செலுத்தப்படுவது ஒருவருக்கு இரு டோஸ் செலுத்திவிட்டால்,இணைதளத்தில் தானாகவே லாக் செய்துவிடும். அவ்வாறு இருக்கையில் பிரம்மதேவ் மண்டல் எவ்வாறு 11 டோஸ் செலுத்தியிருக்க முடியும் என்பது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். பிரம்மதேவ் மண்டல் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா தடுப்பூசி அமிர்தம். தடுப்பூசி மூலம் எனக்கு ஏராளமான பலன் கிடைத்திருக்கிறது. இடுப்பு வலி, முதுகுவலி இருந்தது அது நின்றுவிட்டது. சளித்தொந்தரவு, இருமல், மூச்சிரைப்பு போன்றவையும் இப்போது இல்லை. இதுபோன்ற தடுப்பூசிகளை அரசு சிறப்பாக தயாரித்துள்ளது. அனைத்து மக்களும் ஏன் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தக்கூடாது.

நான் என்னுடைய ஆதார் எண்ணை மாற்றவில்லை, செல்போன் எண்ணையும் மாற்றவில்லை. ஒவ்வொரு முறையும் தடுப்பூசி செலுத்தச் செல்லும்போது இதை அளித்துதான் தடுப்பூசி செலுத்தினேன். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை. இதுவரை 11 டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டேன். சமீபத்தில் 12-வது டோஸ் செலுத்த நான் ஆரம்ப சுகாதார மையத்துக்குச் சென்றேன். ஆனால், தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பினார்கள். இருந்திருந்தால் 12-வது டோஸ் செலுத்தியிருப்பேன். செப்டம்பர் மாதத்தில் மட்டும் 3 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என்று பிரம்மதேவ் மண்டல் தெரிவித்துள்ளார்.

பிரம்மதேவ் மண்டல் கருத்தைக் கேட்டு பீகார் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் வியப்பில் உள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர். உண்மையாகவே பிரம்மதேவ் மண்டல் 11 டோஸ் செலுத்தியிருந்தால், நிச்சயமாக அதற்கு காரணமானவர்கள், கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Bihar , corona
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு