×

கொரோனா தொற்று அதிகரித்தாலும் முழு லாக்டவுன் கிடையாது; மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை: கொரோனா தொற்று அதிகரித்தாலும் முழு டாக்டவுன் கிடையாது என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது ஒமிக்ரான் வைரசும் சுனாமி போன்று பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பேர் இறந்துள்ளனர். 5,331 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். 87,505 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 797 ஆக உள்ளது.

இதில் 330 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப், துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 90 சதவீதம் பேர்களுக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று காணப்பட்டது. 10 சதவீதம் அறிகுறி உள்ள நோயாளிகளில், 1 முதல் 2 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்து, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். தனிமைப்படுத்தும் நாட்களை 7 நாட்களாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளோம். தடுப்பூசிகளை அமல்படுத்துவதில் கடுமையாக இருப்போம். கொரோனா பரவல் அதிகரித்தாலும் நூறு சதவீத முழு அடைப்பு தேவையில்லை.

அத்தியாவசியமற்ற பணிகள் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். ஆனால் அது உடனடியாக கொண்டு வரப்பட வேண்டியதில்லை. கோவிட் நிவாரணத்திற்காக மத்திய அரசு அனுப்பிய நிதியை அரசு பயன்படுத்தவில்லை என்பது தவறு. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, மகாராஷ்டிராவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடப்படும் என்றும், ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாக்பூர் நகரில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி 31ம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Maharashtra Government , There is no full lockdown despite the increase in corona infection; Decision of the Government of Maharashtra
× RELATED ஒன்றிய அரசின் பல்லாயிரம் கோடி ஒப்பந்தம் பெற்ற மேகா நிறுவனம்