×

பொன்னை அருகே 3 ஆண்டாக தவித்த குடும்பத்துக்கு 10 மணி நேரத்தில் மின்சார வசதி: தாசில்தார், சேர்மன் நடவடிக்கை

பொன்னை: வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த பாலேகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி- லதா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கோவிந்தசாமி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு முன் புதிதாக வீடு கட்டி உள்ளனர். இதற்கு மின்வாரியத்தில் மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சாரம் இல்லாததால் குழந்தைகள் இரவில் படிக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.இந்நிலையில், மின்சார இணைப்பு வழங்கவில்லை எனக் கூறி நேற்று முன்தினம் லதா தனது இரு குழந்தைகளுடன் பொன்னை மின்வாரிய அலுவலகத்துக்கு வந்து  மண்ணெண்ணெய் விளக்கை கையில் வைத்துக் கொண்டு தர்ணா மேற்கொண்டார்.

இதுகுறித்து, ‘‘தினகரன்’’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் லதாவின் வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பொன்னை மின்வாரிய இளநிலை பொறியாளர் நாராயணசாமியை வரவழைத்து வீட்டிற்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் வந்து ஒயர் இழுத்து சென்று வீட்டுக்கு மின் இணைப்பை கொடுத்தனர். இதனால்  லதாவின் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், ‘‘தினகரன்’’ செய்தி எதிரொலியாக 10 மணி நேரத்திலேயே நடவடிக்கை மேற்கொண்டு மின்சாரம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Tasildar , 10 hour electricity supply to a family who have been stranded for 3 years near Ponnai: Tasildar, Chairman action
× RELATED கலைஞர் மகளிர் உரிமை திட்டம்...