×

பஞ்சாப்பில் பாதுகாப்பு விதிமீறல் விவகாரம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி

டெல்லி: பஞ்சாப்பில் பாதுகாப்பு விதிமீறல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் சென்றபோது ஹுசைனிவாலா அருகே அவரது கான்வாயை போராட்டக்காரர்கள் மறித்தனர். இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு விதிமீறல் செய்ததாகவும், அலட்சியமாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு கவலையளிப்பதாக தெரிவித்தார். நேற்று பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் மோடி, ஹுசைனிவாலாவில் தேசிய போர் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்தார். மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக சென்றார். அப்போது ஹுசைனிவாலா அருகே பிரதமரின் கான்வாயை போராட்டக்காரர்கள் மறித்தனர். பிரதமருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என பஞ்சாப் அரசு மீது பலரும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து கவலை தெரிவித்தார்.

பாதுகாப்பு குளறுபடி: வெங்கையா நாயுடு வருத்தம்

பாதுகாப்பு குளறுபடி குறித்து பிரதமர் மோடியிடம் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டறிந்தார். பிரதமருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது வருத்தமளிப்பதாகவும் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

பாதுகாப்பு விதிமீறல்: குழு அமைப்பு

பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக விசாரணை நடத்த 2 பேர் கொண்ட குழுவை பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை மற்றும் நிதித்துறையின் முதன்மை செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் கொண்ட இந்த விசாரணை குழு, மூன்று நாள்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது. தலைமை செயலாளர், டிஜிபியை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : Punjab ,PM Modi ,President ,Ramnath Govinda , Security in Punjab, irregularities, President, met, Modi
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்