கல்யாண மண்டபங்கள், ஹோட்டல்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை; சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: கல்யாண மண்டபங்கள், ஹோட்டல்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், விருந்து அரங்கங்கள் மற்றும் கல்யாண மண்டபங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, கூடுதல் காவல் ஆணையர்  (வடக்கு) செந்தில்குமார், துணை ஆணையர்கள் விஷூ மஹாஜன், சிம்ரன்ஜீத் சிங்  காஹ்லோன், சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னையில் தற்பொழுது அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள் மற்றும் சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை //covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும். மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விவரங்களை கொண்டு வருவாய் துறையை சார்ந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என கள ஆய்வு மேற்கொள்வார்கள். மாநகராட்சியின் வருவாய் துறை அலுவலர்களின் கள ஆய்வின்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: