ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் புறாவின் காலில் சீன நாட்டின் ரகசிய குறியீடு: போலீஸார் தீவிர விசாரணை

ஹைதராபாத் : ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் காலில் சீன முத்திரை டேக்குடன் கட்டப்பட்ட புறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே சீமகுர்த்தி எனும் ஊரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2மாதங்களாக இந்த புறா வளர்க்கப்பட்டு வந்துள்ளது. காலில் சீன முத்திரையுடன் கூடிய டேக்குடன் இருந்த புறாவை அந்த கட்டிடத்தின் உரிமையாளர் நாகராஜு தானியங்களை போட்டு வளர்த்துள்ளார். இதற்கிடையே ஒடிசாவில் இது போன்று சீன முத்திரையுடன் புறா கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது.

இதையறிந்து நாகராஜு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தாம் வளர்த்து வரும் புறா குறித்து ஊடகங்களுக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் புறாவை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். புறாவின் காலில் ஆர் 2019 என்று எழுதப்பட்டு இருந்தது. ஏற்கனவே இதே போன்று ஒடிசாவில் ஒரு புறா கைப்பற்றப்பட்டுள்ளதால் உளவு சம்பந்தமாக இந்த புறாக்கள் அனுப்பப்பட்டதா என்ற கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: