கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இறந்து கிடந்த சென்னை எஸ்.ஐ. கணவர்

நாகர்கோவில்: சென்னையில் இருந்து கன்னியாகுமரி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், எஸ்ஐயின் கணவர் இறந்துகிடந்தார். சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று காலை 6 மணியளவில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வந்தது. பயணிகள் இறங்கிய பின், ஊழியர்கள் துப்புரவு பணியில் இருந்தனர். அப்போது எஸ்.10 முன் பதிவு பெட்டியில், வாலிபர் ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார். உடனடியாக ரயில்வே போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் சென்று சோதனை செய்தபோது அவரது மணிபர்சில் ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்தன.

விசாரணையில் அவர் சென்னை எர்ணாவூர் பிருந்தாவன் நகரை சேர்ந்த கிளாட்சன் பிரின்ஸ்லி ஜெபராஜ் (32) என்பது தெரிய வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர். கிளாட்சன் பிரின்ஸ்லி ஜெபராஜின் சொந்த ஊர் குமரி மாவட்டம் குலசேகரம். மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இவரது மனைவி  ரம்யா பிரியதர்ஷினி, சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. ஆக உள்ளார். கணவர் இறந்த தகவலை அவருக்கு போனில் தெரிவித்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக விமானம் மூலம் நாகர்கோவில் வந்தார். இரவு உறங்குவதற்கு முன் ஹெட்போன் மாட்டி பாடல் கேட்டுள்ளார். அவர் இறந்து கிடந்த நிலையில் ஹெட்போன் காதில் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான் கிளாட்சன் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

Related Stories: