×

மணப்பெண் தேடி விளம்பரம் கொடுக்கும் வாலிபர்களுக்கு இளம்பெண்களை திருமணம் செய்து பணம் மோசடி: 5 பேர் கும்பல் கைது

பாலக்காடு: சேலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் கேரள-தமிழக எல்லை கொழிஞ்சாம்பாறை பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன் திருமணத்திற்கு பெண் தேடி வந்ததுள்ளார். அப்போது இவரிடம் திருச்சூரை சேர்ந்த சுனில் (40), பாலக்காடு மாவட்டம் கேரளச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் (35) ஆகியோர் திருமண புரோக்கர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின்னர் தங்களிடம் பெண் இருப்பதாக கூறி கமிஷனாக ரூ.1.5 லட்சம் வாங்கியுள்ளனர்.

கார்த்திகேயன் தனது தங்கையான சஜீதாவை (28) கடந்த டிசம்பர் 12ம் தேதி மணிகண்டனிற்கு ஒரு கோயிலில் திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தவுடன் அன்று மாலை மணமகன் வீடு இருக்கும் இடமான சேலத்திற்கு சென்றனர். மறுநாள் சஜீதாவின் தாயாருக்கு உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சொல்லி அண்ணனும், தங்கையும் பாலக்காட்டிற்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து சஜீதாவுக்கு மணிகண்டன் போன் செய்து பார்த்தார். ஆனால் போன் சுவிட்ச்ஆப் ஆகி இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகடைந்த மணிகண்டன் பாலக்காடு சென்று விசாரித்தார். அப்போது கார்த்திகேயனுடன் சேர்ந்த கும்பல் இளம்பெண்களை காட்டி திருமண மோசடி செய்கிற கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் கொழிஞ்சாம்பாறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மோசடி கும்பலைச் சேர்ந்த சஜீதா (28), தேவி (27), சகீதா (30), சுனில் (40) கார்த்திகேயன் (35) என 5 பேரை கைது செய்தனர்.

கைதான கும்பல் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: மணப்பெண் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து அதன் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்போம். அவர்களை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டுமென நிர்ப்பந்தம் அளித்து திருமணம் முடித்து வைப்போம். பெற்றோருக்கு உடல்நல குறைவு உள்ளது எனக்கூறி ஓரிரு நாட்களிலேயே மணப்பெண்ணுடன் மாயமாகி விடுவோம். இதுவரை கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பகுதிகளிலிருந்து வாலிபர்களை மோசடியாக ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததோடு, அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளோம் இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : 5 gang members arrested for marrying teenagers and money laundering
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...