×

சபரிமலையில் 18018 நெய் தேங்காய் அபிஷேகம்: வரலாற்றில் முதல் முதலாக நடந்தது

திருவனந்தபுரம்: சபரிமலை  கோயில் வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக பக்தர் காணிக்கையாக வழங்கிய  18,018 நெய் தேங்காய் அபிஷேகம் நேற்று அதிகாலை தொடங்கியது. சபரிமலை  ஐயப்பன் கோயிலில் நெய்யபிஷேகம் மிகவும் முக்கியமான வழிபாடாகும். இருமுடி  கட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்யாமல்  திரும்புவதில்லை. சாதாரணமாக பக்தர்கள் தங்களது இருமுடி கட்டில் ஒன்று  அல்லது 2 தேங்காய்களில் நெய்யை நிரப்பி கொண்டு செல்வார்கள்.

இந்த  நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு பக்தர் 18,018 நெய் தேங்காய்  அபிஷேகம் செய்ய தீர்மானித்தார். ஒரு படிக்கு 1001 என்ற கணக்கில் 18  படிகளுக்கும் சேர்த்து 18,018 தேங்காய் நெய்யபிஷேகம் செய்ய அவர்  விரும்பினார். உடனே தனது விருப்பத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு  அதிகாரிகளிடம் கூறினார்.

இதற்கு தேவசம்போர்டு அதிகாரிகளும் சம்மதம்  தெரிவித்தனர். இதையடுத்து நெய்யபிஷேகம் செய்வதற்கு கட்டணமாக கோயிலுக்கு  ரூ.18 லட்சத்தை அந்த பக்தர் கட்டினார். அதன்படி கடந்த வாரம் 7.5 டன்  தேங்காய்கள் லாரி மூலம் பம்பைக்கு கொண்டு வரப்பட்டன. தேங்காயில்  நிரப்புவதற்காக 2280 கிலோ நெய்யும் கொண்டு வரப்பட்டது.

இதன் பிறகு  தேங்காயில் நெய் நிரப்பும் பணிகள் தொடங்கின. இந்த பணிகள் நேற்று முன்தினம் வரை  நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் 18,018 நெய்  தேங்காய் அபிஷேகம் தொடங்கியது. மதியம் 11 மணியளவில் நிறைவடைந்தது. சபரிமலை கோயில் வரலாற்றில் ஒரு பக்தர்  இவ்வளவு அதிகம் நெய் தேங்காய் அபிஷேகம் செய்வது இதுதான் முதல் முறை என்று  சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் கூறினார்.

Tags : Sabarimala , 18018 Ghee Coconut Anointing at Sabarimala: The first in history
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு