×

தென் ஆப்ரிக்காவுக்கு 240 ரன் இலக்கு

ஜோகன்னஸ்பர்க்: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணிக்கு 240 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முத்அல் இன்னிங்சில் 202 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய வேகம் ஷர்துல் தாகூர் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து, 27 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்திருந்தது. புஜாரா 35, ரகானே 11 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 111 ரன் சேர்த்தது. ரகானே 58 ரன் (78 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), புஜாரா 53 ரன் (86 பந்து, 10 பவுண்டரி), ரிஷப் பன்ட் (0) ஆகியோர் ரபாடா வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி திடீர் சரிவை சந்தித்தது. ஹனுமா விஹாரி ஒரு முனையில் உறுதியுடன் போராட... அஷ்வின் 16, ஷர்துல் தாகூர் 28, ஷமி (0), பும்ரா 7, சிராஜ் (0) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்தியா 2வது இன்னிங்சில் 266 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (60.1 ஓவர்). ஹனுமா 40 ரன்னுடன் (84 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா, என்ஜிடி, மார்கோ தலா 3, ஆலிவியர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 240 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்துள்ளது. மார்க்ரம் 31, கீகன் 28 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் எல்கர் 46 ரன், வாண்டெர் டுஸன் 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு இன்னும் 122 ரன் தேவை என்ற நிலையில், இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : South Africa , 240-run target for South Africa
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...