×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்

காஞ்சிபுரம்: இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள 287 வாக்குச்சாவடிகளில், 120 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 120 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 47 அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தி, வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் கலெக்டர் ஆர்த்தி வெளியிட, காஞ்சிபுரம் மாநகராட்சி இணை இயக்குநர் மற்றும் ஆணையாளர் நாராயணன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இதில் ஆண்கள் 6,56,766, பெண்கள் 6,92996, திருநங்கைகள்177 என மொத்தம் 13,49,933 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறையினரிடம் இருந்து பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இந்தத் தேர்தலில் சுமார் 1,300 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், குன்றத்தூர் நகராட்சியின் 30 வார்டுகளில் 55 வாக்குச்சாவடிகளும், மாங்காடு நகராட்சியின் 27 வார்டுகளில் 44 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 34 ஆண்கள், 34 பெண்கள், 29 அனைத்து வாக்காளர்கள் வாக்குசாவடிகளும் உள்ளன.
நிகழ்ச்சியில்  கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ராகுல்நாத்  வெளியிட, மாவட்ட வருவாய்  அலுவலர் மேனுவல்ராஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார். மாவட்டம் முழுவதும் ஆண்கள் 1,38,3607, பெண்கள்  1,41,248, மற்றவர் 450 பேர் என மொத்தம் 27,96,705 வாக்காளர்கள் உள்ளனர். நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலாஜி,  தேர்தல் வட்டாட்சியர் ராஜேஷ் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

Tags : Urban Local Election ,Collector , Urban Local Election: Voter list with photo released by Collector
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...