×

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

* ஆண்கள் 20,04,860, பெண்கள் 20,74,616, இதரர் 1,102 மொத்தம் 40,80,578 வாக்காளர்கள்
* அதிகபட்சமாக வேளச்சேரியில் 3,17,349, குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி துறைமுகம் 1,78,665
* மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்டார். இதில் ஆண்கள் 20,04,860, பெண்கள் 20,74,616, இதரர் 1,102 மொத்தம் 40,80,578 வாக்காளர்கள் உள்ளனர்.சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், துணை ஆணையர் விஷூ மஹாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் குலாம் ஜிலானி பாபா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், 2022ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது.மேலும் கடந்த 1ம் தேதியன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 01.11.2021 முதல் 30.11.2021 முடிய பெறப்பட்டன.

அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2022ம் ஆண்டிற்கான துணைப் பட்டியல்களுடனான இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துணைப் பட்டியல்களுடனான இறுதிப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மண்டல அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் www.election.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்து கொள்ளலாம்.கடந்த 1.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தினைச் சார்ந்த 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களது எண்ணிக்கை விவரம் ஆண்கள் 19,92,198, பெண்கள் 20,60,767, இதரர் 1,073, மொத்தம் 40,54,038, 2022ம் ஆண்டு சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக 31,378 பெயர் சேர்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதன்படி ஆண்கள் 15,006, பெண்கள் 16,340, இதரர் 32, மொத்தம் 31,378 மேற்படி பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய ஆணை பிறப்பிக்கபட்டு துணைப்பட்டியல்களில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களது எண்ணிக்கை 31,181 அதன்படி ஆண்கள் 14,918, பெண்கள் 16,231, இதரர் 32 என மொத்தம் 31,181 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது களஆய்வின் போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்ய கோரி வரப்பெற்ற படிவம்-7ன் எண்ணிக்கை 4,725 ஆகும்.

அவற்றில் வாக்காளர் பதிவு அலுவலர்களது விசாரணைக்கு பின்னர் வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,641 ஆகும். மேலும், எந்த பெயர்களும் தகுதியின்மை அடிப்படையில் தன்னிச்சையாக நீக்கம் செய்யப்படவில்லை. மேலும், இவ்வாறு அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து உரிய நடைமுறையை பின்பற்றி இறந்து போன, நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் பலமுறை பட்டியலில் பதிவுகள் பெயர்கள் தொடர் திருத்தம் மற்றும் சிறப்பு சுருக்கத் திருத்த காலங்களில் நீக்கம் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை விவரங்கள் ஆண்கள்15,184, பெண்கள் 14,950, இதரர் 22 என மொத்தம் 30,156 மேற்குறிப்பிட்ட 30,156 நீக்கம் செய்யப்பட்ட பெயர்களில் 2,580 இறந்தவர்கள், 21,255 நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் மற்றும் 6,321 பலமுறை பட்டியலில் பதிவு ஆகும்.

இன்று வெளியிடப்பட்ட இறுதி திருத்தப் பட்டியலுக்கு பின்னர் சென்னை மாவட்டத்தில் அமையப்பெற்ற 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர்களது எண்ணிக்கை விவரங்கள் மொத்தம் ஆண்கள் 20,04,860, பெண்கள் 20,74,616, இதரர் 1,102 என மொத்தம் 40,80,578 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப்பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களது எண்ணிக்கையினை விட 26,540 கூடுதல், இந்த எண்ணிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை விட கூடுதலாக 0.65 சதவீதம் உள்ளது.  இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை 43,132 ஆகும். வாக்காளர் எண்ணிக்கை குறைந்த பட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,78,665 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3,17,349 வாக்காளர்களும் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai , Release of final voter list for 16 assembly constituencies in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...