×

தமிழகத்தில் உள்ள 675 கோயில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்

சென்னை: சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் திருகுடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பாலாலயம் நேற்று நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இணை ஆணையர்கள் ரேணுகா தேவி, சுதர்சன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் கலந்து  கொண்டனர். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: சென்னையில் உள்ள மிகப்பழமையான 100 ஆண்டுகள் முந்தைய வடபழனி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு வரும் 23ம் தேதி  சஷ்டி திதி மீன லக்னத்தில் காலை 10 முதல் 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்காக 33 வடபழனி முருகனுக்கும், 75 பரிவார தெய்வங்களுக்கும் ஆகமொத்தம் 108 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் குடமுழுக்கு நடைபெறாமல் நிலுவையில் உள்ள திருக்கோயில்களை கணக்கில் எடுத்து அதற்கான பணிகளை விரைந்து முடித்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 675 திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்திட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு முதல்வர் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமிநாசினி பயன்படுத்தவும், வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதன்படி  அனைத்து திருக்கோயில்களிலும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா (ஒமிக்ரான்) நோய் தாக்கம் குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் பல்வேறு வழிமுறைகள் குறித்தும் முதல்வர் மருத்துவ வல்லுனர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்பின்னர் கோயில்களில் பக்தர்கள் அனுமதி தொடர்பான செய்தியை அறிவிப்பார். திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பல்வேறு இடங்களில் பட்டா பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை கண்டறிந்து அந்த பட்டா உத்தரவை ரத்து செய்து மீண்டும் அந்த இடங்களை பட்டா மாறுதல் செய்யப்பட்டு திருக்கோயில் வசம் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும், உடந்தையாக யார் இருந்தாலும், அவர்கள் மீது இந்த அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க தயங்காது. அதேபோல் கோயில் நிலங்களை யார் ஆக்கிரமித்தாலும், அவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பது உறுதி. தமிழ்நாடு ஒன்றிய அரசு, மாநில அரசினை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது என்பதற்கு கடந்த பெருமழை காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளுக்கு மாநில அரசு நிவாரண உதவி கோரியும் இதுவரை ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை என்பது ஒன்றே சாட்சியாகும் என்றார்.

Tags : Kudamuluku ,Tamil Nadu ,Minister ,BK Sekar Babu , Kudamuluku will be conducted soon in 675 temples in Tamil Nadu: Minister BK Sekar Babu Information
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...