×

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றிய உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு செல்லும்: அதிமுகவின் மனுவும் தள்ளுபடி; உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றிய உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தது சரிதான் என்றும், பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காக வேதா நிலையம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு  தீர்ப்பளித்து அதிமுகவின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம்  இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம்  மற்றும் அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நினைவு இல்லம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளிவந்த ஓராண்டுக்கு பின் வழக்கு  தொடரப்பட்டுள்ளது. நினைவு இல்லம் அமைப்பது பொது பயன்பாடா, இல்லையா என்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும். வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. மெரினாவில் 80 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் மற்றொரு நினைவு இல்லம் அமைக்க தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது. சென்னையில் ஏற்கனவே ராஜாஜி, காமராஜருக்கு இரு நினைவிடங்கள் உள்ளன. எனவே, இந்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால் முந்தைய அரசு முடிவுகள் செல்லாது என கூற முடியாது என்றும் வாதிட்டார்.

தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்  ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கை எதிர்கொண்ட மாநில அரசு, மேல்முறையீடு செய்யாமல் தனி நீதிபதி தீர்ப்பை ஏற்று சாவிகளை ஒப்படைத்துள்ளது என்று  வாதிட்டார். தீபா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், கையகப்படுத்தியதில் நடைமுறை தவறுகள் உள்ளன என்றார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகள் நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகிய இருவரும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அதிமுக மறுக்கவில்லை. தீபக், வாரிசு சான்று கோரி விண்ணப்பித்த மறுநாளே சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

நினைவு இல்லமாக மாற்ற பொது பணத்தை செலவு செய்வதற்கு பதில், மக்கள் நலனுக்கு  செலவிட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு யோசனையை ஏற்றும் ஒரு நினைவிடம் உள்ள நிலையில் மற்றொரு நினைவு இல்லம் தேவையில்லை என்று தனி நீதிபதி உத்தரவை ஏற்றும் அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள், வேதா நிலையம் என்ற தனியார் இடத்தை கையகப்படுத்தியதில் விதிமீறல் உள்ளது என்று கூறும் அதிமுக, தனி நீதிபதி முன்பாக வழக்கு விசாரணைக்கு  வந்தபோது வழக்கில் இணையவில்லை.

நிலம் கையகப்படுத்துதலில் நடைமுறை தவறுகள் இருக்கிறது. பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை. தனி நீதிபதி உத்தரவு  உறுதி செய்யப்படுகிறது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று  தீர்ப்பளித்தனர். நிலம் கையகப்படுத்துதலில் நடைமுறை தவறுகள் இருக்கிறது. பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Vedha station ,AIADMK ,Court , The order of the special judge quashing the order to convert the Vedha station into a memorial house will go: AIADMK's petition also dismissed; Judgment of the two-judge session of the High Court
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...