×

பெருநகரங்களில் டெல்டா வைரஸை காட்டிலும் ஒமிக்ரான் பாதிப்பு தற்போது அதிகரிப்பு: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பெருநகரங்களில் டெல்டா மரபணு வைரஸை காட்டிலும் ஒமிக்ரான் மரபணு வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்துவதில் பெரியவர்களை விட சிறார்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும். நேற்று வரை உலக அளவில் 26 லட்சம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது.

பொதுமக்கள் அச்சம் மற்றும் பதற்றமடைய தேவையில்லை. தொற்று அறிகுறி தென்பட்டால் ஸ்கீரினிங் சென்டர்களில் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே தொற்று கண்டறியப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். நோய் அறிகுறியே இல்லாமல், ஆக்சிஜன் அளவும் குறையாமல் இருப்பவர்களும் இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் தனியார் மருத்துவமனைகளில்  யாராவது சிகிச்சை பெறுகிறார்களா என கண்காணிக்கப்படுகிறது. அவ்வாறு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் தற்போது வரை 1,16,587 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 1730.97 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. 217 பிராண வாயுவை உருவாக்கும் கருவி உள்ளது. பெரியவர்களை விட சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 3 நாட்களுக்குள் 12 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் முடிவெடுப்பார். பெருநகரங்களில் டெல்டா மரபணு வைரஸை காட்டிலும் ஒமிக்ரான் மரபணு வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. வரும் 12ம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Public Welfare ,Radhakrishnan , Omigran exposure is currently higher than the delta virus in metropolitan areas: Interview with Public Welfare Secretary Radhakrishnan
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...