முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது: கவர்னர் உரைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு

சென்னை: முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று கவர்னர் உரையில் சுட்டிகாட்டியுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக ஆட்சி வருவதற்கு அடித்தளமாக இருந்த வாக்குறுதிகள் குறித்து கவர்னர் உரையில் எதுவும் தெரிவிக்கப்படாதது  மக்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை: புதிய திட்டங்கள் இல்லை. புதிய  செயல் வடிவங்கள் இல்லை. புதிய அறிவிப்புகள் இல்லை. செலவினங்களை குறைக்கும் செயல்முறைகள் வகுக்கப்படவில்லை.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழக முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு நடப்பு ஆண்டில் ரூபாய் 20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்க அளிக்கக்கூடாது போன்ற அறிவிப்புகள் மூலம், திமுக அரசு தமிழ்நாட்டின் மாநில உரிமைக் கொடியை பட்டொளி வீசிப் பறக்கச் செய்து இருக்கின்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு, மக்களுக்கான நிவாரண உதவி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, மாதந்திர மின்கட்டண வசூல் போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆளுனர் உரையில் எந்த அறிவிப்பும்  இடம் பெறவில்லை.  

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மாநிலத்திற்கு வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வரும் ஜூன் 30ம்தேதி முடிவுக்கு வருகிறது. கொரோனா பெருந் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மழை வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள இழப்புகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு 2024 ஜூன் 30ம்தேதி வரை இந்த இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டுமென்று சரக்குகள் மற்றும் சேவை வரி மன்றத்தையும், நிதியமைச்சகத்தையும் கவர்னர் உரை வற்புறுத்துவது சரியானது.  

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கவர்னர் உரையில் புதிய திட்டங்கள்  இடம் பெற்றிருந்தது என்றாலும் கூட அவைஅனைத்தும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. 10 ஆண்டுகளில் குடிசை இல்லா தமிழகம் என்பது வரவேற்கத்தக்கது. அதற்குண்டான செயல்பாடுகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: