கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 2 நாள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டம்: நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை என சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவை கூட்டம் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர்  அப்பாவு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவையை எத்தனை நாட்கள்  நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அவை முன்னவர்  துரைமுருகன், அரசு கொறடா கோவி. செழியன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்,  அவையை 2 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்றும், நாளையும் சட்டப் பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது: நாளை (இன்று) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, நாளை மறுநாள் விவாதம் முடிவுற்று, நன்றி தெரவிக்கும் தீர்மானத்துக்கு முதல்வரின் பதிலுரையுடன் நிறைவு பெறும். இன்னும் 2 நாட்கள் மட்டும் கூட்டத் தொடர் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காலையில் சட்டமன்றம் வினாக்கள், விடையுடன் ஆரம்பிக்கும். இதை நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் பதிலுரையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். முதல்கட்டமாக பரீட்சார்த்த முறையில் நாளை (இன்று) ஆரம்பிக்க இருக்கிறோம். அந்த வகையில் கேள்வி நேரம் நேரடியாக ஒளிப்பரப்பாகும்.

கேள்வி, பதிலில் அதிகமான உறுப்பினர்கள், பில்லில் அதிகமானவர்கள் பேசுவார்கள். விவாதத்தில் சுருக்கமாகத் தான் பேசுவார்கள். நேரடி ஒளிபரப்பு முழுமையாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மற்ற மாநிலங்களில் நடத்துவது போல நடக்கும். சிறப்பு கவன ஈர்ப்பு வந்தால் சொல்கிறோம். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் சுருக்கமாக 2 நாட்களில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா என்று வந்துள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் பேச விருப்பப்படுவார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. எல்லோரையும் பேச வைக்க வேண்டும் என்று ஆளும் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் இயற்கை ஒத்துக்கொள்ள வேண்டும். சென்னையில் கொரோனா அதிகரிக்கிறது. நமக்கு மக்கள்தான் முக்கியம். அமெரிக்காவில் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆறுதல் என்ன என்றால், முதல்வர் பதவி ஏற்ற போது ஒரு நாளைக்கு 40 ஆயிரம் என பாதிப்பு என இருந்தது.

ஆக்சிஜன் இல்லை. மருந்து இல்லை. எந்த கட்டமைப்பு இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை.இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. எந்த குறைபாடும் இல்லை. கிராமத்தில் கேளுங்கள். அது என்ன இருந்தாலும் முதல்வர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துள்ளது. அதுதான் சின்ன ஆறுதல். நோய் பரவலை நமது இஷ்டத்துக்கு குறைந்துவிடும் கூடிவிடும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அது வருகிற வேகத்தை பார்த்தால் அச்சமாக தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஜெய்ஹிந்த் சொன்னது ஒரு குற்றமா?

கவர்னர் உரையில், ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறியுள்ளது பற்றி கேட்கிறீர்கள்.  ‘இந்தியா வாழ்க’ என்று அவர் சொன்னது ஒரு குற்றமா. அது குற்றம் இல்லை. தவறு இல்லை. நல்ல  வார்த்தை தான். நான்தான் அதில் இல்லாததை நன்றி, வணக்கம் என்று சொன்னேன். பாரதியார் பாடலிலேயே பாரத நாட்டுக்கு நன்றி சொல்லிவிட்டோம்.  நாம் எல்லோரும் இந்தியர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழர்கள் என்பது  அடையாளம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஜெய்ஹிந்த் என்று யாரும் பேசக் கூடாது என்று யாரும் சட்டம் போடலீயே’’ என்றார்.

* பிபின் ராவத், ரோசய்யாவுக்கு இரங்கல்

சட்டப் பேரவையில், இன்றைய நிகழ்வாக, தமிழக முன்னாள் கவர்னர் மறைந்த ரோசய்யா, முப்படை தளபதி மறைந்த பிபின் ராவத் மற்றும் வீரர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, கன்னட நடிகர் மறைந்த புனித் ராஜ்குமார், விவசாய சங்க பொதுச்செயலாளர் மறைந்த துரை மாணிக்கம் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிதி ஒதுக்கல் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

Related Stories: