பேரவையில் இருந்து வெளிநடப்பு எடப்பாடி பேட்டி: பொய்யுரைகளின் கட்டுரை: அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் தாக்கு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். கவர்னர் உரையாற்றியதும், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படித்தார். தொடர்ந்து நேற்றைய கூட்டம் முடிந்தது. கூட்டம் முடிந்ததும் சட்டப்பேரவை வளாகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி: வெளிநடப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி, பொய்யுரைகளினுடைய முழுத் தொகுப்பு. போதை நடமாட்டம் கூடிவிட்டதாக சொல்லியிருக்கிறார். குட்காவை பிரபலப்படுத்தியதே எடப்பாடி ஆட்சி தான். எனவே இதை சொல்ல அவருக்கு அருகதை இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றம் பெருகிவிட்டதாக சொல்லியிருக்கிறார். பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை யார் ஆட்சி காலத்தில் நடந்தது என்பதை எடப்பாடி மறந்து விட்டாரா. அவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

அன்றைக்கு அதிலே யார் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ, அவர்களை எல்லாம் இன்றைக்கு மிகப் பெரிய பொறுப்புகளிலே கொண்டு வருவதற்காக அவர்களை காத்தார்கள் என்பது தான் உண்மை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்கிறார். துப்பாக்கிக் கலாச்சாரத்தை தூக்கிப் பிடித்த ஆட்சி, சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக, சீர்குலைத்து, சந்தி சிரிக்க வைத்து அந்த போலீஸ் போர்ஸ் இருக்கக்கூடிய ஒரு கவுரவத்தை குலைத்த ஆட்சி யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. டிஜிபியைப்பற்றி சொல்கிறார், டிஜிபி அறிக்கை விடுகிறார் என்று. அவருடைய ஆட்சியில் என்ன நடந்தது. டிஜிபி என்று ஒருவர் இருந்தார்.  

ஆனால், அதற்கும் மேலாக ஸ்பெஷல் டிஜிபி என்று ஒருவரை கொண்டு வந்து அந்த டிஜிபியை இயங்கவிடாமல் போட்டு, டிஜிபியை இயங்கவிடாமல் தடுத்த ஆட்சி எடப்பாடியுடைய ஆட்சி. அப்படி போடப்பட்ட  ஸ்பெஷல் டிஜிபி மேலேயே பாலியல் குற்றச்சாட்டு வந்து அவர் இன்றைக்கு ஒவ்வொரு கோர்ட்டுகளாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய டெல்டா மாவட்டத்தினுடைய விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள்.  இன்றைக்கு நிவாரணங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டணியில் மத்திய அரசில் இருக்கக்கூடிய பாஜ அரசை வலியுறுத்தி தேசிய பேரிடர் மேலாண்மை அந்த நிறுவனத்திலிருந்து அந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்கு அவர்கள் மத்தியிலே தங்களுடைய செல்வாக்கை செலுத்துவதை விட்டு விட்டு இன்றைக்கு இந்தப் பிரச்னையை அரசியலாக்க முற்படுவது என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மழை வெள்ளத்ததைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.  இவர்களுடைய காலத்தில் மழை வந்தபோது எந்த இடத்திற்கு போய் முதல்வர் நின்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை இடங்களுக்கும் போய் நின்றார். திடீரென்று எதிர்பார்க்காத வகையில் அன்றைக்கு சென்னையில் மாமழை கொட்டுகின்றபோது, திருச்சி மாநகரத்தில் இருந்த முதல்வர் உடனடியாக திரும்பிவந்து, வீட்டிற்குப் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை அவர்களைப் போல. நேரடியாக களத்திற்கு வந்தார், இரவு 1 மணி வரை களத்திலே இருந்தார், அந்தப் பகுதிகளை பார்வையிட்டு அதற்கான நிவாரணங்களை வழங்குவதற்கு உத்தரவிட்டார்.

பொங்கலுக்கான பணம் கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் எதற்காக பொங்கலுக்கு பணம் கொடுத்தீர்கள், அதற்கு முன்னால் ஐந்து வருடம் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் பொங்கலுக்கு பணம் கொடுக்கவில்லையே. போன வருடம் தேர்தல் வரப்போகிறது என்பதற்காக பொங்கலுக்காக கொடுத்தீர்கள். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 வழங்குவோம் என்று சொன்னோம். ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகையை முழுமையாக நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

அம்மா மினி கிளினிக்கைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். அங்கு டாக்டரையும் நியமிக்கவில்லை, நர்சையும் நியமிக்கவில்லை. பெயருக்காக வைத்துவிட்டு, அந்தக் கட்டிடத்திற்கு வாடகையும் கொடுக்காமல் சென்று விட்டீர்கள். . எனவே, அரசியல் காரணங்களுக்காக அம்மா கிளினிக்கை மூடவேண்டும் என்று சொன்னால், அம்மா உணவகங்கள் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? எனவே நிச்சயமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியின்பால் இந்த அரசு செயல்படுவது இல்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நகைக்கடன்களை கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். உங்கள் காலத்தில், திருவண்ணாமலையில் ஒருவர் மட்டும் 62 பெயர்களில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருக்கிறார், எல்லாம் 10 பவுன் அளவிற்கு வைத்து வாங்கியிருக்கிறார். இந்த மோசடிகளுக்கு, இந்த ஊழலுக்கு யார் துணை போயிருக்கிறார்கள்? யாருடைய ஆட்சியில் நடந்திருக்கிறது? இந்த ஆட்சியைப் பொறுத்தமட்டில், யார் தவறு செய்திருந்தாலும், சட்டப்பிரகாரம் அவர்களையெல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதியை நாங்கள் நிலைநிறுத்துவோம். கொடநாடு விவகாரத்தில் எப்படி இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதோ, அதே நடவடிக்கைகளை சட்டத்தின் முன் நிறுத்தக்கூடிய வகையில், சட்டத்தின் வழிவகை கொண்டு, இவற்றிற்கான ஒரு முடிவைக் கொண்டுவரக்கூடிய அளவில் நிச்சயமாக நாங்கள் செயல்படுவோம்.

இது எதைக் காட்டுகிறது என்று சொன்னால், அவர்கள் தங்கள் ஆட்சியிலே அதிகாரத்தைப் பயன்படுத்தி, காவல் துறையில் துஷ்பிரயோகங்களை உருவாக்கி அவர்கள் எல்லாம் செயல்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

 நீட் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இன்றைக்கு ஆளுநர் உரையில்கூட, நீட் நிலைப்பாட்டில் நாங்கள் சொல்லியிருக்கிறோம். தொடர்ச்சியான முயற்சிகளை அதிமுகவைப் போல ஒரு கண் பூச்சுக்காக அல்லது உண்மைகளை மறைத்துவிட்டு நாடகமாடுவதற்கு இல்லாமல், உளப்பூர்வமாக, நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: