நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு: சட்டப்பேரவையில் வெளிநடப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பது அதிமுகவின் நிலைபாடு என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை நேற்று நடந்தது. இந்தாண்டின் முதல் நாள் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஏதோ ஒரு கருத்தை தெரிவிக்க முயன்றார். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொடர்ந்து அவர் 4 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டே இருந்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தனக்கு பேச வாய்ப்பு அளிக்காததால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அனைத்து அதிமுக உறுப்பினர்களும்  வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பேட்டி: விசாரணை என்ற பெயரில் கட்சி நிர்வாகிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அழைத்துச் சென்று இரண்டு மூன்று நாட்கள் எங்கு வைத்துள்ளார்கள் என்று கூட தெரியவில்லை. திட்டமிட்டு அதிமுக நிர்வாகிகள் மீதும், முன்னாள் அமைச்சர் மீதும் பொய் வழக்கு போடுகின்றனர். இதை கண்டித்து சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பது அதிமுகவின் நிலைபாடு. இந்த மசோதாவுக்கு ஆதரவு தருவதாக சொன்னோம் சட்டமன்றத்தில் ஆதரவு தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: