தேசிய கொடி, ஒன்றிய, மாநில அரசுகளின் இலச்சினைகளை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: தமிழக காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு, தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் 2014ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மறைவிற்கு பின்னர் இந்த வழக்கை மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை நடத்தி வந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு வருமாறு: விதிமுறைகளுக்கு முரணாக வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, இலச்சினைகள், பெயர் மற்றும் முத்திரைகள், ஸ்டிக்கர்ஸ் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென்று பத்திரிகை மற்றும் ஊடகங்களில் டிஜிபி விளம்பரம் செய்ய வேண்டும்.

இதனை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சின்னங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து தகவல்களை பெறுவதற்கும், விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி உத்தரவிட வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜனவரி 21ம் தேதிக்குள் அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: