பீகாரில் 2 துணை முதல்வர்கள், 3 அமைச்சர்களுக்கு கொரோனா: டெல்லியில் 3வது அலை; அமைச்சர் தகவல்

பாட்னா: பீகார் மாநில துணை முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 3வது அலை தொடங்கியுள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாகி வரும் நிலையில், தினசரி தொற்றுப் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஒமிக்ரான் பாதிப்பு 2,000க்கும் மேல் சென்ற நிலையில், பீகார் மாநிலத்தின் துணை முதல்வர்களான ரேணு தேவி, தர்கிஷோர் பிரசாத் மற்றும் மாநில அமைச்சர்கள் சுனில் குமார், அசோக் சவுத்ரி, விஜய் சவுத்ரி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாளை (ஜன. 6) முதல் ஜன. 21ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘டெல்லியில் இன்று 10,000 பேருக்கு மேல் கொரோனா உறுதியாக வாய்ப்புள்ளது. நோய் பாதிப்பு உறுதியாகும் விகிதமானது 10 சதவீதமாக உயரக்கூடும். டெல்லியில் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது.

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளை 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள 2 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன, டெல்லி முழுவதும் இரவுநேர ஊரடங்கு, வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: