கோடாரி, ஆயுதங்களுடன் கூட்டத்தில் புகுந்து பாஜக மாஜி எம்எல்ஏ மீது தாக்குதல்; 2 பாதுகாவலர்கள் கழுத்தை நெரித்து கொலை: 3 துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு தப்பிய நக்சல்கள்

சாய்பாசா: ஜார்கண்ட்டில் கோடாரி, ஆயுதங்களுடன் மக்கள் கூட்டத்தில் புகுந்த நக்சல்கள், பாஜக மாஜி எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தியதுடன், அவரது பாதுகாவலர்கள் இருவரை கழுத்தை ெநரித்து கொன்று, 3 துப்பாக்கிகளை பறித்து சென்றனர். ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசா மாவட்டம் கோயல்கேரா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜீல்ருவானிற்கு சென்ற பாஜக முன்னாள் எம்எல்ஏ குருசரண் நாயக் மீது, அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல் கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து குருசரண் நாயக்கின் பாதுகாவலர்கள் இருவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பியது.

இதுகுறித்து சக்ரதர்பூரின் பிரிவு போலீஸ் அதிகாரி திலீப் கல்கோ கூறுகையில், ‘முன்னாள் பாஜக எம்எல்ஏ குருசரண் நாயக், கால்பந்து போட்டியை தொடங்கி ஜீல்ருவானிற்கு வந்தார். அவரது வருகையை அறிந்த நக்சல்கள், முன்பே திட்டமிட்டப்படி மக்கள் கூட்டத்திற்குள் புகுந்துள்ளனர். போட்டி முடிந்த உடனேயே கூட்டத்தில் இருந்தவர்களை 20 பேர் கொண்ட நக்சல் கும்பல் திடீரென தாக்கியது. அவர்களின் கையில் கோடாரி, சிறிய ஆயுதங்கள் இருந்தன. உஷாரான பாதுகாப்பு போலீசார், முன்னாள் எம்எல்ஏவை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். முன்னாள் எம்எல்ஏவின் பாதுகாப்புப் பணியாளர்கள் இருவரை கழுத்தை  நெரித்து கொன்ற நக்சல்கள், அவர்கள் கையில் வைத்திருந்த இரண்டு ஏகே-47 துப்பாக்கிகளைப் பறித்துக் கொண்டு  தப்பினர். மேலும் மற்றொரு பாதுகாவலரை காயப்படுத்தியதுடன், அவரது  ஏகே-47 துப்பாக்கியையும் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்’ என்றார். இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ குருசரண் நாயக் கூறுகையில், ‘கால்பந்து போட்டியில் மூவாயிரம் பேர் வரை பங்கேற்று இருக்க வாய்ப்புள்ளது.

விளையாட்டு போட்டி முடிந்தவுடன் 15 முதல் 20 பேர் கொண்ட நக்சல்கள் கும்பல் கோடாரி மற்றும் சிறிய ஆயுதங்களுடன் திடீரென கூட்டத்தில் இருந்தவர்களை தாக்கியது. பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தனர். அதையே வாய்ப்பாக பயன்படுத்தி சில நக்சல்கள் தப்பிவிட்டனர். என்னை போலீசார் மீட்டு, அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோனுவா காவல் நிலையத்தில் பத்திரமாக வைத்துள்ளனர்’ என்றார். முன்னதாக 2012ம் ஆண்டு, குருசரண் நாயக் எம்எல்ஏவாக இருந்தபோது, ​​ஆனந்த்பூர் காவல் நிலையப் பகுதியில் நக்சல் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆனால் அப்போது அவர் அதிர்ஷ்டவசாக உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: