×

மாட்டுத் தொழுவத்தில் குழந்தை பெற்றது முதல் பத்மஸ்ரீ விருது வரை 1,200க்கும் மேற்பட்ட ‘அனாதை குழந்தைகளின் தாய்’ மரணம்: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

புனே: மகாராஷ்டிராவில் 1,200க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளின் தாயாக விளங்கிய சிந்துத்தாய் சப்கல், புனேயில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் பிம்ப்ரி மேகே கிராமத்தை சேர்ந்த சிந்துத்தாய் சப்கலுக்கு, அவரது பத்தாவது வயதில் 30 வயது ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

இருபது வயதில் முழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரால் கொடூரமாக அடித்து வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டார். உடல் முழுக்கக் காயங்களோடு வீதியில் தடுமாறி நடந்த சிந்துத்தாய், வீட்டருகில் இருந்த மாட்டுத் தொழுவத்திலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிறந்த குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு சில கிலோ மீட்டர்களை நடந்தே கடந்து தாய் வீட்டை அடைந்தார். ஆனால் அங்கும் நிராகரிக்கப்பட்டார். வேறு வழியின்றி வீதியில் கிடந்த ஒரு கூர்மையான கருங்கல்லால் தொப்புள் கொடியை அறுத்தெடுத்தார்.

இந்தச் சம்பவம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிந்துத்தாயை ஆழமாகப் பாதித்தது. மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் கைக்குழந்தையோடு உயிரை மாய்த்துக்கொள்ள மனமில்லை. பிழைக்க வழி தெரியாமல் பிச்சை எடுத்தார். தன்னுடையக் குழந்தைக்காக மட்டுமின்றி வீதியில் விடப்பட்ட பல குழந்தைகளுக்காகவும் பிச்சை எடுத்தார். நாளடைவில் அந்தக் குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்து ‘அனாதைகளின் தாய்’ என வாஞ்சையோடு அழைக்கப்பட்டார்.

பல ஆண்டுகள் கழித்து அவருடைய கணவர் தேடிவந்து தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டதாக மன்னிப்பு கேட்டார். எல்லாக் குழந்தைகளையும் அரவணைத்தே பழகிய சிந்துத்தாயின் மனம் கணவரையும் ஒரு குழந்தையாகப் பாவித்து ஏற்றுக்கொண்டது. 500-க்கும் மேற்பட்ட விருதுகள் அவரைத் தேடி வந்துள்ளன. அவரை கவுரவிக்கும் விதமாக எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவற்றை முழுவதுமாகக் குழந்தை காப்பகங்களுக்காகப் பயன்படுத்துதினார். ‘சிந்துத்தாய் சப்கல்’ என்கிற பெயரில் மையங்களை நடத்தி வந்தார்.

இவரால் வளர்க்கப்பட்ட பலர் இன்றைய நிலையில் பிரபலங்களாக உள்ளனர். இவரது வாழ்க்கை பின்னணியில் மராத்தி ெமாழியில் திரைப்படங்களும் வந்துள்ளன. இந்நிலையில், அனாதை குழந்தைகளின் தாயாக விளங்கிய சமூக சேவகர் மற்றும் பத்மவிருது பெற்ற சிந்துதாய் சப்கல் (73), நேற்றிரவு புனேவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஹெர்னியா ஆபரேஷன் செய்யப்பட்டது. புனேவில் உள்ள கேலக்ஸி கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர் சிகிக்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை இயக்குனர் ஷைலேஷ் புண்டம்பேகர் தெரிவித்தார். கிட்டத்தட்ட 1,200க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்ெதடுத்து வளர்த்த ‘அனாதைகளின் தாய்’ மரண செய்தி அனைத்து தரப்பினர் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த சிந்துத்தாய் சப்கல், தனது உன்னத பணிக்காக இதுவரை 700க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். புனேயில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கி கவுரவித்தது.


Tags : More than 1,200 'Mothers of Orphans' Deaths From Babysitting to Padma Shri Awards: President, Prime Minister and other leaders mourn
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!