பள்ளி நண்பன் இறந்த தேதியில் கல்லூரி மாணவன் தற்கொலை: திருவள்ளூர் அருகே பரிதாபம்

திருவள்ளூர்: பள்ளி நண்பர் இறந்த தேதியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகரை சேர்ந்தவர் பாசூரான். இவரது மகன் மில்டன் என்கிற அப்பு (17). இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்துவந்தார். தன்னுடன் 11ம் வகுப்பு முதல் ஒன்றாக படித்துவந்த அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த நண்பன் உதயகுமார் கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி திடீரென இறந்தார். அந்தநாள் முதல், மில்டன் மிகுந்த வருத்தத்தில் இருந்ததுடன் யாருடனும் சரியாக பேசவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் மில்டன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை பெற்றோர் காப்பாற்றிவிட்டனர். பின்னர் மில்டனுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். இதனிடையே நண்பன் இறந்தநாளான 5ம் தேதி அன்று தானும் இறக்கவேண்டும் என்று முடிவு செய்த மில்டன், இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்குப்போட்டுள்ளார். அவரை மீட்டு பெற்றோர் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மில்டன் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதனால் பெற்றோர் கதறி துடித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நண்பர் இறந்த நாளில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: