கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கடைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே பாத்தபாளையம் கிராமத்தில் கடைகளில் வைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக நேற்று மாரிமுத்து தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பாத்தபாளையம் கிராமத்துக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சின்னஞ்சிறு பொட்டலங்களில் வைத்து 2 வாலிபர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

அதை சோதனை செய்தபோது, கஞ்சா என போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் வடமாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மாலிக் (36), ரோஷன்குமார் (27) எனத் தெரியவந்தது. இவர்கள் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் வசிக்கும் வடமாநில இளைஞர்களுக்கு கஞ்சா விற்று வந்ததாகத் தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: