ஆரணி, மேற்கு ஆரணி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் மானிய விலையில் வெங்காய விதைகள் கிடைக்க நடவடிக்கை-குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ஆரணி : ஆரணி, மேற்கு ஆரணி தோட்டக்கலைதுறை அலுவலகத்தில் மானிய விலையில் வெங்காய விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.ஆரணி வேளாண்மை துறை அலுவலகத்தில்  விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் திருமலைச்சாமி தலைமை தாங்கினார். ஆர்டிஓ நேர்முக உதவியாளர் மூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் கார்த்திக், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பெருமாள் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில், விவசாயிகள் கூறியதாவது:ஆரணி அடுத்த மருசூர் கிராமத்தில் உள்ள ஏரிநீர்வரத்து கால்வாய், ஏரிக்கால்வாய் மற்றும் ராட்டிணமங்கலம் கிராமத்தில் குளத்தில் இருந்து ஏரிக்கு செல்லும் நீர்வாரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு  இலவச சைக்கிள்கள்  கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு திருவண்ணாமலையில் சைக்கிள் வழங்குவதை மாற்றி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கு மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலை துறை சார்பில் வெங்காய விதைகள் மானிய விலையில் வழங்கிட வேண்டும். வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்களில் விதைகள் இருப்பு விவர பட்டியல் வைக்க வேண்டும்.

மேலும், எஸ்வி, நகரம், தச்சூர், விண்ணமங்கலம், மேல்சீசமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்று படுகையில் இரவு, பகலாக நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதேபோல், ஆரணி, களம்பூர், கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய  பொதுமக்களிடம் புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் ₹25 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கின்றனர். ஆரணியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, தாசில்தார் பெருமாள், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories: