திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும்-கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவிப்பு

ஜோலார்பேட்டை : ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும்’’ என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசியதாவது:திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட அளவிலான ஒரு குழுவும் வட்ட அளவிலான ஒரு குழுவும் அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

கொரோனா நெறிமுறை பற்றி முகக்கவசம் அனைவரும் அணிய வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் 2500 நபர்களுக்கு அதிகமாக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அரசு அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் எஸ்பி பாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், சப்-கலெக்டர் (பொறுப்பு) பானு, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: