×

உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி காரியாபட்டி ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-20 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீன் பறிமுதல்

காரியாபட்டி : காரியாபட்டியில் சாலையோரக் கடைகள் மற்றும் துரித உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து, கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், காரியாபட்டி என பல்வேறு பகுதிகளில் பாஸ்புட், சிக்கன் உணவகங்கள் உள்ளன. இதில், சில உணவகங்களில் சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற எண்ணெய் உள்ளிட்ட பொருட்களால் உணவுகள் தயார் செய்கின்றனர்.

இந்த உணவுகளை பள்ளி மாணவர்கள் உட்பட கூலித்தொழிலாளிகளும் சாப்பிட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு 50 வயதில் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2ம் தேதி நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக காரியாபட்டி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் மீன் சிக்கன் கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில், 20 கிலோவிற்கும் மேலான கெட்டுப்போன இறைச்சி மற்றும் எண்ணெய் டின் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் உத்தரவின்பேரில், காரியாபட்டி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முகமது இஸ்மாயில் காசிம், மோகன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார் தலைமையிலான குழுவினர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது காரியாபட்டி தேவர் சிலை அருகே உள்ள மீன் கடைகளில் ஆய்வு நடத்தினர். அங்கு பிரீசரில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன நண்டு, மீன், கோழி இறைச்சி, பொறித்த மீன் உட்பட சுமார் 20 கிலோவிற்கும் மேலான கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

 மேலும் மீன், கோழி பொறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட காலாவதியான எண்ணெயையும் பறிமுதல் செய்தனர். கலப்படம் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வந்தால் அவர்களது உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எச்சரிக்கை விட்டனர்.

Tags : Food Security Department ,Kariyapatti , Kariyapatti: Food safety officials raided roadside shops and fast food restaurants in Kariyapatti.
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!