புதுச்சேரி ஏஎப்டி திடலில் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பாம்பே சர்க்கஸ்-பார்வையாளர்களை அசத்தும் கலைஞர்கள்

புதுச்சேரி : புதுச்சேரி ஏஎப்டி திடலில் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க  கிரேட் பாம்பே சர்க்கஸ் நிறுவனம் சார்பில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு சாகசங்கள் நிறைந்த இந்நிகழ்ச்சியை மக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கண்டுகளித்து வருகின்றனர்.இந்திய அளவில் புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனமாக விளங்கி வருகிறது கிரேட் பாம்பே சர்க்கஸ் நிறுவனம். தற்போது பெரியவர்களாக இருப்பவர்கள் பல இந்த நிறுவனத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சியை தங்கள் சிறு வயதில் கண்டு ரசித்தவர்களாகத்தான் இருப்பார்கள். விலங்குகளின் சாகசம், மேஜிக் கலைஞர்களின் வித்தைகள், அந்தரத்தில் தொங்கும் கலைஞர்களின் சாகசம் என பல வித்தியாசமான காட்சிகளை இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் பார்த்திருப்பார்கள்.

இந்நிலையில் கிரேட் பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சி தற்போது புதுச்சேரி ஏஎப்டி திடலில் நடந்து வருகிறது. கடந்த வாரம் இந்நிகழ்ச்சியை அனிபால் கென்னடி எம்எல்ஏ துவக்கி வைத்தார். சர்க்கஸ் நிறுவனத்தின் தலைவர் பாலகோபால் வரவேற்றார். அன்றைய தினத்தில் இருந்து தொடர்ந்து சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் நடந்து வருகிறது.

இதில் 7ம் அறிவு திரைப்பட புகழ் கலைஞர்கள்,  பல்வேறு வெளிநாடு, வெளி மாநிலங்களை சேர்ந்த திறமையான கலைஞர்கள் கலந்துகொண்டு பல வித்தியாசமான சாகசங்களை செய்து காண்பித்து அசத்துகின்றனர். குறிப்பாக ப்ளை டிரிபிள் எனப்படும் பார் விளையாட்டு, ஸ்கேட்டிங் பந்துகளை காலால் உதைத்து சாகசம் செய்தல், ஸ்கை வாக், 8 பந்துகளை 2 கைகளால் லாவகமாக பிடிக்கும் ஜக்லின் விளையாட்டு, லூஸ் வேர் எனப்படும் கப் அண்டு சாசர் விளையாட்டு என பல நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன.

இடையில் ஜோக்கர்கள் அடிக்கும் லூட்டிகள் அனைவரையும் மெய்மறந்து சிரிக்க வைக்கின்றன. இதுதவிர ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாட்டு கிளிகளின் சாகசங்கள், கிளி, புறா மற்றும் நாய்களின் சாகசங்கள் என பல நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

Related Stories: