×

மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா-5.5 லட்சம் மலர் நாற்று நடவு பணி துவக்கம்

ஊட்டி : ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 2022 கோடை சீசனில் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக 5.5 லட்சம் மலர் நாற்று நடவு பணிகள் துவங்கி உள்ளது.நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரிக்கு ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் சமயமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரிக்கும்.

கோடை சீசன் சமயத்தில் வருபவர்களை மகிழ்விக்க ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நூற்றாண்டுகளை கடந்து மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக, ஜனவரி மாதத்திலேயே பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். மே மாதம் நடைபெறும் மலர்க் கண்காட்சியின் போது பூங்கா முழுவதும் பல வகைகளில், லட்சக்கணக்கான மலர்ச் செடிகளில் வண்ண, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும்.

இந்த சூழலில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கோடை விழாவிற்காக ஊட்டியில் உள்ள பூங்காக்கள் தயாராகி வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக இரு ஆண்டுகளாக மலர் கண்காட்சி உள்ளிட்ட கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், 124வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் நேற்று துவங்கின. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் பங்கேற்று மலர் செடிகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில்,``ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சிக்காக மலர் செடிகள் நடவு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஜெரோனியம், சைக்ளமன், சினேரியா, கிலக்ஸ்சீனியா, ரெனுன்குலஸ், ஆர்னமென்டல்கேல், ஒரியண்ட்லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிளாக்ஸ், சன்பிளவர், அஸ்டில்மே உள்ளிட்ட 275 வகை மலர் விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மரிலங்களில் இருந்தும் பெறப்பட்டு மலர் நெடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்துவதற்காக 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன’’ என்றார்.
இதில் ஊட்டி எம்எல்ஏ கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Feeder Botanical Park , Ooty: 5.5 lakh flowers for the flower show to be held in the summer season 2022 at the Centenary Government Botanic Gardens in Ooty.
× RELATED தாவரவியல் பூங்கா பகுதியில் நடைபாதை கடைகள் அகற்றம்