பெரியார் நீர்வீழ்ச்சியில் சீரான நீர்வரத்து-ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

சின்னசேலம் :  கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு நின்று தற்போது சீரான நீர்வரத்து உள்ளதால் குளித்து மகிழ வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார் நீர்வீழ்ச்சி மற்றும் மேகம், செருக்கலாறு, எட்டியாறு உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளது. இதில் மேகம், பெரியார் நீர்வீழ்ச்சிகள் மட்டுமே குளிக்க ஏற்றதாக உள்ளது.

ஆனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பெரியார் நீர்வீழ்ச்சியையே நாடி வருகின்றனர். ஏனெனில் எட்டியாறு நீர்வீழ்ச்சி அடர்ந்த காட்டு பகுதியில் உள்ளதுடன், அங்கு குளிக்க சென்ற 4 வாலிபர்கள் இறந்த சம்பவமும் நடந்துள்ளது. அதேபோன்று மேகம், செருக்கலாறு நீர்வீழ்ச்சிகளிலும் குளிக்க சென்ற பாண்டி மற்றும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட வாலிபர்களும் இறந்துள்ளனர். இதனால் கல்வராயன்மலையை பொருத்த வரை வெள்ளிமலை செல்லும் வழியில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியையே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

இது பெண்கள் மற்றும் சிறுவர்கள் குளிப்பதற்கு ஏற்ற நீர்வீழ்ச்சியாகும். கல்வராயன்மலையில் பெய்த மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக பெரியார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெரியார் நீர்வீழ்ச்சியில் தெளிந்த சீரான நீர்வரத்து உள்ளது. இதனால் பாண்டிச்சேரி மாநிலம் மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மலையின் இயற்கை அழகை ரசிப்பதுடன், பெரியார் நீர்வீழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் குளித்தும் வருகின்றனர்.

Related Stories: