சத்தியமங்கலம் வாரச்சந்தை வளாகத்தில் அபாய நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்ற கோரிக்கை

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் இடிந்து விழும் அபாய  நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம்  கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட  வாரச் சந்தை வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த  அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால்  கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய  நிலையில் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் இப்பகுதியைச் சேர்ந்த  20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் மையத்திற்கு சென்று வரும்  சூழ்நிலையில் இடிந்துவிழும் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு தங்கள்  குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.

இது குறித்து சத்தி நகர பாஜ இளைஞரணி தலைவர் சிவராம் கூறியதாவது: நெல்லையில் தனியார்பள்ளி கட்டிடம்  இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து  தமிழக அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதால் அதிகாரிகள்  அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை  சமர்ப்பித்துள்ளனர்.

 

 இந்த நிலையில் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள  வாரச் சந்தை வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் மிகவும்  மோசமான நிலையில் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் விட்டு எப்போது  வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழ்நிலை உள்ளது. எதிர்பாராதவிதமாக  விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த  அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து  பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதியதாக அங்கன்வாடி மையம் கட்டித்தர  

நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: