×

சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி.யில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,417 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை 46 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் பல மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளதால் எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் மற்றும் சளி இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததால் அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடைய எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 46 பேரின் மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரியில் கூடுதலாக மாணவர்களுக்கு கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவு வந்தால் மேலும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 10,000திற்கும் அதிகமாக கொரோனா பரிசோதனைகள் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று மட்டும் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 5,593 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : MIT ,Chrompet, Chennai , corona
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு