அரசியலுக்காகவே ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்பட்டது.. அதிமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு வழங்கினர்.

அவர்கள் வழங்கியுள்ள தீர்ப்பில், ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு செல்லும். ஜெயலலிதாவின் 2வது நினைவிடம் தேவைற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறு இல்லை.வேதா இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகள் முறையாக இல்லை. விதிமீறல்கள் உள்ளன என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு சரியே. பொது நோக்கத்திற்காக ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்படவில்லை. அரசியல் காரணத்துக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: