×

முககவசம் அணியாமல் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளால் ஒமிக்ரான் பரவும் அபாயம்

மாமல்லபுரம்: நாடு முழுவதும், ஒமிக்ரான் எனும் புதிய தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதேப்போல், அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சானிடைசரால் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் பல பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து, பஸ்களில் வருகின்றனர். அவர்கள் தரிசனம் முடிந்து, மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.

மேலும், கடற்கரைக்கு சென்று ஆபத்தை உணராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளிக்கின்றனர். அவர்கள், கொண்டு வரும் வாகனங்களை முறையாக சாலையோரத்தில் நிறுத்தாமல், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மற்ற வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றன. இங்கு, வரும் சுற்றுலா பயணிகள், முக கவசம் அணியாமல் கடற்கரை, புராதன சின்னங்கள், ஓட்டல், தங்கும் விடுதிகள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவதாலும், புராதன சின்னங்கள் பகுதியில் ஆங்காங்கே எச்சில் துப்புவதாலும் ஒமிக்ரான் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு முககவசம் அணியாமல் வரும் செவ்வாடை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்து, திருப்பி அனுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நடவடிக்கை எடுக்காவிட்டால், பூஞ்சேரி மற்றும் மாமல்லபுரம் நுழைவாயில் அருகே வெளிமாநில பஸ்களை தடுத்து நிறுத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

Tags : Mamallapuram , Risk of spreading Omigron by tourists coming to Mamallapuram without wearing a mask
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...