ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் அன்னதான திட்டத்தில் முறைகேடு: அலுவலர்களுக்கு இணை ஆணையர் எச்சரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலின் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை தொடர வேண்டும் என இந்து அறநிலைய துறை இணை ஆணையர் ஜெயராமன், கோயில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். மாமல்லபுரம் ஸ்ரீ தலயன பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இக்கோயிலில், கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, 24 ஆண்டுகளை கடந்த பின்னரும், கும்பாபிஷேகம் நடத்தவில்லை. இந்தவேளையில், கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த, கடந்த நவம்பர் மாதம் பாலாயம் செய்யப்பட்டது. இதையடுத்து, பழமை மாறாமல் புதுப்பிப்பது குறித்து இந்து அறநிலைய துறை இணை ஆணையர் ஜெயராமன் திடீர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயில் நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது, கோயில் அர்ச்சகர்கள், திடீரென இணை ஆணையரை சூழ்ந்து பாலாலயம் செய்வதற்கு, வெளியூரில் இருந்து அர்ச்சகர்களை வரவழைத்து 3 நாட்கள் யாகம் வளர்க்கப்பட்டது. ஆனால், யாகம் வளர்த்ததற்கு இன்னும் கோயில் நிர்வாகம் பணம் வழங்கவில்லை என முறையிட்டனர். உடனே, இணை ஆணையர் ஜெயராமன், கோயில் செயல் அலுவலர் சங்கரை அழைத்து உடனடியாக இன்றே அர்ச்சகர்களுக்கு யாகம் வளர்த்த பணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அப்போது, அங்கிருந்த சிலர், இங்கு வரும் பக்தர்கள் திருப்பணி மற்றும் அன்னதான திட்டத்துக்கு நன்கொடை வழங்குகின்றனர். அந்த நன்கொடைக்கு முறையான ரசீது கொடுக்க வில்லை என புகார் தெரிவித்தனர். உடனே, கோயில் கணக்கர் சந்தானத்திடம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு கணினி ரசீது வழங்க வேண்டும். இதேப்போல், மீண்டும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அப்போது, இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: