×

பம்பை ஹில்டாப்பில் மகரஜோதி தரிசிக்க பக்தர்களுக்கு வசதி: திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை

திருவனந்தபுரம்: இந்த வருடம் பம்பை ஹில்டாப் பகுதியில் இருந்து பக்தர்கள் மகரஜோதியை  தரிசிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு  தீர்மானித்து உள்ளது. சபரிமலை ஐயப்பன்  கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வரும் 14ம்  தேதி மகர விளக்கு பூஜையும், அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி  தரிசனமும் நடைபெறுகிறது. முன்னதாக வரும் 11ம் தேதி பிரசித்தி பெற்ற எருமேலி  பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் (12ம் தேதி) ஐயப்ப  விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா  கோயிலில் இருந்து புறப்படும்.

ஜனவரி 14ம் தேதி மாலையில் இந்த  திருவாபரணம் சன்னிதானத்தை அடைகிறது. அதன் பிறகு ஐயப்பன் விக்ரகத்தில்  திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான்  பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். இந்த ஜோதியை தரிசிப்பதற்காக  நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக மகரஜோதியை  தரிசிப்பதற்காக பக்தர்களுக்கு  சன்னிதானம், பம்பை, புல்மேடு உள்பட  பல்வேறு பகுதிகளில் வசதிகள் ஏற்படுத்தப்படும். பம்பையில் மிக உயரமான  ஹில்டாப் பகுதியில் பக்தர்களுக்கு மகரஜோதி தரிசிக்க வசதி உண்டு. ஆனால்  கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை காரணமாக இந்த பகுதி கடுமையாக  சேதமடைந்தது. இதனால் கடந்த சில வருடங்களாக இங்கு மகரஜோதி தரிசிக்க  பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த  நிலையில் இந்த வருடம் பம்பை ஹில்டாப் பகுதியில் மகர ஜோதியை தரிசிக்க  பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இதேபோல் இடுக்கி மாவட்டத்திலுள்ள புல்மேடு, பாஞ்சாலி மேடு,  பருந்தும்பாறை ஆகிய இடங்களிலும் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரிய பாதை நேரம் நீட்டிப்பு

கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் எருமேலி வழியாக செல்லும் பெரியபாதை கடந்த  சில வருடங்களாக மூடப்பட்டு இருந்தது. 35 கிலோ மீட்டர் உள்ள இந்த பாதையில் 25 கிலோ மீட்டருக்கு மேல் அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த பாதையில் செல்ல  அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து  இந்த பாதை சீரமைக்கப்பட்டு கடந்த வாரம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு  வருகின்றனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதால் இந்த வழியாக செல்ல  பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பாதை வழியாக செல்வதற்கான நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி  கோயிக்கல் காவு வழியாக அதிகாலை 5.30 மணி முதல், முற்பகல் 11.30 மணி வரை செல்லலாம். அழுதக்கடவு, முக்குழி ஆகிய பாதை வழியாக காலை 7 மணி முதல் மதியம்  1 மணி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பேட்டை துள்ளும் குழு 3 நாள் தங்க அனுமதி

வழக்கமாக எருமேலியில் பேட்டைதுள்ளி சபரிமலை வரும் பக்தர்கள் 3 நாட்கள் பம்பை மற்றும் சன்னிதானத்தில் தங்கியிருந்து மகரஜோதியை தரிசித்த பின்னரே திரும்புவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரானா பரவல் காரணமாக மகரஜோதி தினத்தன்று சன்னிதானம் வரும் பக்தர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தேவசம்போர்டு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து பேட்டை துள்ளி வரும் பக்தர்கள் 3 நாட்கள் தங்க அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Tags : Maharajodi ,Pampa Hildop: Thiruvithankur Devasport Activity , Facility for devotees to view Maharajoti at Pambai Hilltop: Travancore Devasthanam Board action
× RELATED சபரிமலை பொன்னம்பலமேட்டில் காட்சி...