×

டெல்டா-ஒமிக்ரான் வைரஸ்கள் விஸ்வரூபம்: இந்தியாவில் 3வது அலை தொடங்கியது

புதுடெல்லி: டெல்டா-ஒமிக்ரான் வைரஸ்கள் உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளன. இது இந்தியாவில் 3வது அலை தொடங்கியிருப்பதை காட்டினாலும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். டெல்டாவை விட பல்வேறு மாறுபாடுகளை கொண்ட ஒமிக்ரான் புது வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி விட்டது. தென் ஆப்ரிக்காவில் சுமார் 2 மாதத்திற்கு முன் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் தொடர்ந்து 7வது நாளாக தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த தொற்று எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 261 ஆக உள்ளது. இதில் ஒமிக்ரான் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

நேற்று காலை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, நாடு முழுவதும் 1,892 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 568, டெல்லியில் 382 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிக ஒமிக்ரான் தொற்றுள்ள முதல் 10 மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 124 பேர் பலியாகி உள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 830 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது இந்தியாவில் 3வது கொரோனா அலை தொடங்கியிருப்பதை குறிப்பதாக ஒன்றிய அரசின் கொரோனா பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘நாட்டின் பெருநகரங்களில் 50 சதவீத புதிய தொற்றுக்கு ஒமிக்ரான் வைரசே காரணம். ஒமிக்ரான் வேகமாக பரவத் தொடங்கி விட்டது. இதனால் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியாவில் 3வது அலை தொடங்கி விட்டதை குறிக்கிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  தென் ஆப்ரிக்காவின் நிலையை பார்க்கையில், அங்கு ஒமிக்ரானால் புதிய அலை மிக வேகமாக அதிகரித்தது. ஆனால் 2 வாரத்தில் விரைவாக சரியத் தொடங்கியது. இந்தியாவிலும் அதே போன்ற நிலை இருக்கலாம். விரைவில் இந்தியாவிலும் 3வது அலை உச்சத்தை எட்டி, அதே வேகத்தில் சரியத் தொடங்கும். எனவே பொதுமக்கள் சுய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு

தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியோ நேற்று அறிவித்தார். அரசு அலுவலகங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும், தனியார் அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் 50 சதவீத திறனில் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, பஞ்சாப் அரசு இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவும், கல்வி நிறுவனங்களை மூடவும், தொற்று பரவுவதைத் தடுக்க திரையரங்குகளை 50 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேர் பாதிப்பு

அமெரிக்காவில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமிக்ரான் வைரஸ் தோன்றிய பிறகு கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தினசரி தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன் உலகிலேயே மிக அதிகமாக ஒரே நாளில் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இது 2 மடங்காக அதிகரித்து 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர்.

3 பேருக்கு வைரஸ்: சீனாவில் லாக்டவுன்

கொரோனா வைரஸ் தோன்றிய சீனா, முதல் அலையை தவிர வேறெந்த அலையையும் எதிர்கொள்ளவில்லை. ஏனெனில் அந்தளவுக்கு அங்கு கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. விரைவில் அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ள நிலையில், ஹீனான் மாகாணத்தின் யுஜோவ் நகரில் கடந்த சில நாட்களில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நகருக்கே ஒட்டுமொத்த ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரில் 11 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். யாரும் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒமிக்ரானை மிஞ்சும் வீரியமிக்க புதிய வைரஸ் ஐஎச்யு

டெல்டா, அதைத் தொடர்ந்து ஒமிக்ரான் வைரசிடமிருந்து இன்னும் தப்பிக்க முடியாத நிலையில் இவைகளை விட அதிக வீரியமிக்க, தடுப்பூசியை கடந்து பாதிக்கக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது. பி.1.640.2 ஐஎச்யு (IHU) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வைரசை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்சின் மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இந்த புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது, ஒமிக்ரான் வைரசை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 46க்கும் மேற்பட்ட பிறழ்வுகளை கொண்டுள்ளது. ஆல்பா வைரசில் இருந்து உருமாறிய இந்த புதிய வகை வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பை தாண்டி தாக்கக் கூடியது என முதற்கட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.


Tags : India , Delta-Omigron Viruses Viswaroopam: 3rd wave begins in India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...