புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறல் நடந்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு தொடரலாம்: ஐகோர்ட் அனுமதி

சென்னை: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை கோரிய வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், கொண்டாட்டத்தின்போது விதிமீறல் நடந்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனாவின் அடுத்த வாரிசான ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி கரிக்கலாம்பாக்கம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகன்நாதன் மற்றும் புதுச்சேரி தமிழக வாழ்வுரிமை கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த மாதம் 29ம் தேதி விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அமர்வு, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம். டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை ஒரு மணி வரையிலான மூன்று மணி நேரத்துக்கு மாநிலத்தில் மதுபானங்கள் விற்க கூடாது. மதுபான விற்பனை கடைகள் மட்டுமல்லாமல் பார்கள் உள்ள ஓட்டல்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. தடுப்பூசி 2 தவணை போட்டுக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க கூடாது. அதிகாரிகள், காவல்துறை, தடுப்பூசி சான்று கேட்டால் பொதுமக்கள் சான்றிதழை காட்ட வேண்டும். பிரபலங்கள் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள கூடாது. பொதுமக்களின் நலனை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை சாலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருந்தனர். புதுச்சேரி அரசு கொடுத்த உத்தரவாதம் மீறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள், பத்திரிகை செய்திகள், படங்கள் உள்ளன. வழக்கு நடந்த நாளில் புதுச்சேரியில் 2 பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் பாதிப்பு இருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது 7 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், புத்தாண்டு நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் விதிமீறல் நடந்திருந்தால் மனுதாரர்கள் புதுச்சேரி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரலாம் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: