சென்னை: ஒரு காலத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கி வந்த சென்னை பல்கலைக்கழகம் இன்றைக்கு அந்த பெயரை இழந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் கூடுதல் தொழில்நுட்ப அலுவலராக பணி புரிந்த பாஸ்கர் என்பவருக்கு, கூடுதல் நூலக உதவியாளராக பதவி உயர்வு வழங்கி தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 2 பேர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் எஸ்.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் மனுதாரர்களின் பதவி உயர்வில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்தே பல்கலைக்கழக அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.