×

சென்னையில் பல இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு: கொரோனா, ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு

சென்னை: கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அண்ணா சாலை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். சென்னை, சைதாப்பேட்டை, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்க விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது, பொது இடங்களில் நிச்சயமாக, உறுதியாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், இரண்டு டோஸ் தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும், அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து, அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கு நேற்று நேரில் சென்று, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சென்னை, ஓமந்தூரார் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை பேருந்து நிலையம், ரிச்சி தெரு அருகில், காஸ்மோபாலிடன் கிளப் அருகில், ஸ்பென்சர் பிளாசா எதிரில், ஆயிரம் விளக்கு பகுதி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை சித்தி விநாயகர் கோயில் தெரு, எல்டாம்ஸ் சாலை சிக்னல், எஸ்.ஐ.இ.டி.  கல்லூரி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் முகக்கவசங்களை வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பொதுமக்களுக்கு முதல்வர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். பொதுமக்களும் அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தனர்.

அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நேற்று திடீரென சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் நேரடியாக முகக்கவசம் அளித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டினர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Corona ,Omigron , Awareness of Chief Minister MK Stalin by going to various places in Chennai and giving masks to the public: People appreciate the action taken against Corona and Omigron.
× RELATED நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள்...