நெல் கொள்முதல் நிலைய தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வருக்கு தொழிற்சங்கத்தினர் நன்றி

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிற்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய ஊதியத் தொகையை உயர்த்தி அறிவித்தமைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சண்முகம், பொருளாளர் நடராசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் மாநில தலைவர் பேச்சிமுத்து, பொதுச்செயலாளர் கோ.சி.வள்ளுவன் மற்றும் ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில தலைவர் சாமிக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: