×

பொங்கலுக்கான கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கரும்பு விவசாயிகளின் நலனை முன்னிட்டு பொங்கலுக்கான கரும்பை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 2022ம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும்  வகையில், 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், கரும்பும்  சேர்த்து வழங்க, அரசு உரிய உத்தரவை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. கரும்பு கொள்முதலை இறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் நடந்து வருகின்றன. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு கொள்முதல் குறித்து, கீழ்க்கண்ட தெளிவான வழிமுறைகளை, தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.
அது வருமாறு:
1. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.
2. முழு கரும்பின் விலை ரூ.33 ஆக இருக்க வேண்டும் (போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் உட்பட).
3. கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
4. கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும்.
5. நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யக் கூடாது.
6. அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பில் இருந்து எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்க கூடாது.
7. இந்த வருடம் கரும்பு கொள்முதல் விலை 10% அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு விவசாயிகளிடம் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட விலையைவிட கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
8. கரும்பு கொள்முதல் செய்யும்போது, எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்பட கூடாது.
9. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும்.
10. எந்தெந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக் கூடாது.  அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது.
11. கரும்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.
12. கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
13. குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவதில் எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காமல் விநியோகம் செய்ய வேண்டும். மேற்கூறிய அறிவுரைகளை தவறாமல் பின்பற்றும்படி தொடர்புடைய  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து  மாவட்டங்களுக்கும் கூடுதல் பதிவாளர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இந்த பணியினை கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sugarcane for Pongal should be procured directly from farmers: Government of Tamil Nadu Order
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...