தமிழர் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.1,297 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்

*முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 வகையான பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்

* 2.15 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.1,297 கோடி மதிப்பில் 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், 2022ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார்.

அதன்படி, பொங்கலுக்கு தேவையான பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுத்தம் பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம் மற்றும் துணிப்பை ஒன்றும், ஒரு முழு கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1,297 கோடி செலவில் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை 10 குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை நேற்று காலை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று காலை 10 மணி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுத்தின், உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் ராஜராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

* ரேஷன் கடைகளில் 10ம் தேதி வரை கிடைக்கும்

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கலெக்டர்கள் பொங்கல் பரிசுப் பை வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக  கொரோனா பரவலை தடுக்கும் வகையில், குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கவும், கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெரு வாரியாக  உள்ள குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் தினமும் சுழற்சி  முறையில் சுமார் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, குடும்ப  அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை  குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள்  ரேஷன் கடைகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசு  தொகுப்பு வருகிற 10ம் தேதி வரை வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதனால் டோக்கனில் உள்ள நாள், நேரத்தை பின்பற்றி பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற கடைகளுக்கு வர வேண்டும் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று தொடங்கி வருகிற 10ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவித்தாலும், ஊருக்கு சென்றவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க முடியாதவர்களின் வசதிக்காக பொங்கல் பண்டிகைக்கு பிறகும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

Related Stories: